சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற இருக்கும் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியினை தொடங்கி வைக்க உள்ளார். இந்தியாவில், முதல்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளதால் போட்டி நடைபெறும் தமிழகம் மட்டும் இல்லாமல் நாடு முழுவதுமே இதற்கான முன்னேற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா சார்பில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் மூன்று ஆடவர் அணியும் இரண்டு மகளிர் அணியும், அணிக்கு 5 வீரர்கள் என மொத்தம் 25 செஸ் வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதையடுத்து, தற்போது கூடுதலாக ஐந்து பேர் கொண்ட மகளிர் அணி சி பிரிவை அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதன்படி ஈஷா கரவடே, ஷாகிதி வர்ஷினி, பிராட்யுஷா போடா, பி.வி.நந்திதா மற்றும் விஷ்வா வாஷ்ணவாலா இதில் இடம் பெற்றுள்ளனர். இதன் மூலம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா மூன்று ஆடவர் அணி, மூன்று மகளிர் அணி என மொத்தம் 30 வீரர்களுடன் களம் இறங்க உள்ளது. இவர்களுக்கான பயிற்சி, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.