சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி வரும் செப்டம்பர் மாதம் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. இந்த நிலையில், சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் நேரடியாக பங்கேற்கும் 21 வீராங்கனைகளின் பட்டியலை உலக டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. 250 புள்ளிகளுக்கான இந்த போட்டிகளில் மொத்தமாக 32 வீராங்கனைகள் பங்கேற்கவுள்ள நிலையில், 21 பேர் நேரடி பங்கேற்பாளர்களாகவும், ஒருவர் சிறப்பு பங்கேற்பாளராகவும், 4 பேர் வைல்ட் கார்டு நுழைவிலும், 6 பேர் தகுதி சுற்றிலும் பங்கேற்க உள்ளனர்.