ஐபிஎல் கிரிக்கெட் : 16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே இருவரும் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. இதில், அதிகபட்சமாக ஜாசன் ராய் அரை சதம் அடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், இந்த போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, சென்னை அணி தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.