சென்னை: தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் சென்னையில் இலக்கிய திருவிழா நாளை தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது. விழாவில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் 100 நூல்கள் வெளியிடப்பட உள்ளன. இந்த விழாவை மக்கள் அனைவரும் கண்டு மகிழலாம். மேலும், நூலக வளாகத்தில் அரிய பருவ இதழ்கள், நூல்கள், ஆவணங்கள், தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் காலம் முதல் வெளிவந்த அரிய நாணயங்கள், சென்னையின் வரலாறு சார்ந்த படங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன.
இதற்கிடையே விழாவை ஒட்டி கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை உள்ளிட்ட இலக்கியப் போட்டிகள், தமிழில் பிழையின்றி எழுதுதல், சமகால சூழலில் படைப்பு உருவாக்கம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சிப் பட்டறைகளும் நடத்த முடிவானது.
இதன் தொடக்க விழா சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது: தமிழ் மொழியின் மரபுகள், கலை, பண்பாட்டுச் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில் இலக்கியத் திருவிழா நடத்தப்படுகிறது. எழுத்தும், பேச்சும் திராவிட இயக்கத்தின் முக்கிய அங்கமாகும்.