சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த சனிக்கிழமை மூன்று பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து ரூ.20 கோடி மதி்ப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை நடந்த வங்கியிலேயே வாடிக்கையாளா் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன், தனது இரு நண்பா்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வங்கிக் காவலாளிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியா்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் கொள்ளையர்கள். இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு வங்கிக் கொள்ளை குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 போ் நேற்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முருகன் உள்ளிட்ட சிலரையும் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்து 72 மணி நேரத்துக்குள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.