சென்னை: சீனா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஹாங்காங் போன்ற வெளிநாடுகளில் உருமாறிய பி.எப்.-7 கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் நவம்பர் மாதம் 4 பேர் குணம் அடைந்து விட்டனர்.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மாற்று மருந்தான சித்த மருத்துவ கபசுர குடிநீர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் அதிகம் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த கபசுர குடிநீர் பக்கவிளைவு ஏதும் இல்லாத மருந்து என்பதால் தமிழக அரசின் ‘டாம்கால்’ நிறுவனம் கபசுர பொடியை அதிக அளவு தயாரித்து ஒவ்வொரு ஊர்களுக்கும் அனுப்பி வந்தது. இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். தமிழகத்தில் தயாரிக்கும் இந்த கபசுர குடிநீர் பவுடரை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக இந்தியா முழுவதும் வினிநோகிக்கலாமா? என்று மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இதற்காக கபசுர குடிநீர் பவுடரை வாங்குவதற்கு தமிழக அரசுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து மத்திய ஆயுஸ் அமைச்சக அதிகாரி கூறுகையில் கபசுர குடிநீரில் சுக்கு, திப்பிலி, லவங்கம், சிறுகாஞ்சொறி வேர், ஆடாதொடா இலை, கற்பூரவல்லி இலை, நில வேம்பு, கோரைக்கிழங்கு, கடுக்காய்த்தோல் உள்ளிட்ட 15 மூலிகைகள் இடம் பெற்றுள்ளதால் இந்த சூரணத்தை கொதிக்க வைத்து குடிக்கும்போது பக்க விளைவு ஏற்படுவதில்லை. இதனால் 100 கிராம் பாக்கெட்டுகளாக கபசுர குடிநீர் சூரணம் இந்தியா முழுவதும் வழங்க முடியுமா? என்று தமிழக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.