டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில், மதுபான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி துணை முதலமைச்சராக உள்ள மணீஷ் சிசோடியா வீடு உள்பட அவருக்கு சொந்தமான மற்றும் சம்பந்தம் உள்ள சுமார் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி) காலை முதல் சுமார் 14 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர். சிபிஐ சோதனைக்கு டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த நிலையில், சோதனையின் முடிவில் சிசோடியாவின் கணினி, செல்போன் உள்ளிட்டவையை பறிமுதல் செய்த சிபிஐ அதிகாரிகள் சிசோடியா உட்பட 15 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ள சிசோடியா மதுபான விற்பனையாளர் ஒருவரிடம் ரூ.1 கோடியை நிதியாக பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிபிஐ சோதனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சிசோடியா, ”நாங்கள் மிகச் சிறந்த நேர்மையாளர்கள். தாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. தங்கள் பணியை நேர்மையுடன் தொடர்ந்து செய்வோம். சிபிஐயை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது” என அவர் குற்றஞ்சாட்டினார்.