புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவன அறிக்கையால் அதானி குழுமம் பங்குகள் ஒரு சில நாட்களில் 120 பில்லியன் டாலர்களை இழந்தது. அந்த அறிக்கையின் உண்மை குறித்து குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வெள்ளியன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் பதில் அளிக்கையில், ‘‘எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் குழுவை அமைத்தால் அதில் மத்திய அரசுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
இதையடுத்து, உச்சநீதிமன்றம் குழு தொடர்பாக முன்மொழியப் பட்ட விதிமுறைகள் குறித்த அறிக்கையை புதன்கிழமைக்குள் மத்தியஅரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி அடுத்தகட்ட விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.