காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் நாளை மறுநாள் (17ஆம் தேதி) நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த நிலையில், இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட அறிக்கையை விவாதிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அணையைக் கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மேகதாது அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை குறித்து எந்த விவாதத்தையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது என்றும், இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை மத்திய ஜல்சக்தி அமைச்சகத்திற்கு வழங்குமாறும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் ஒன்றை எழுதினார். இந்த நிலையில், நாளை மறுநாள் நடக்க இருந்த காவிரி மேலாண்மை வாரிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.