திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்றில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 14 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து சமூக நல பாதுகாப்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட சமூகநல பாதுகாப்புத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர், காப்பகத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இன்று அமைச்சர்கள் கீதாஜீவன், சாமிநாதன் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் உள்ளிட்டோர் காப்பகத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், இந்த சம்பவம் தொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும், காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 3 குழந்தைகள் இறப்புக்கு காரணமான காப்பகத்தை மூடவும், அந்த காப்பகத்தில் உள்ள குழந்தைகளை அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.