தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி நடைபெறும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, கடந்த மார்ச் மாதம் சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில், வரும் 17ஆம் தேதி நடக்க இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச அதிமுக முடிவெடுத்துள்ளது. அதேபோல, ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணை அறிக்கை முதலியவை சட்டப்பேரவையில் அரசு தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.