தமிழகத்தில் உள்ள 1,545 தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு முதற்கட்டமாகக் காலை உணவு வழங்கும் திட்டம் ரூ.33.56 கோடி செலவில் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, இன்று காலை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலைச்சர் அவர்களுக்கு ஊட்டி விட்டு தானும் மாணவர்களுடன் அமர்ந்து உணவை சுவைப்பார்த்தார். இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழக அரசு இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு வகைகள் மற்றும் அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த சிற்றுண்டி வகைகளிலிருந்து ஏதாவது ஒரு சிற்றுண்டியினை அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது இரண்டு நாட்களிலாவது, அந்தந்தப் பகுதிகளில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையிலான சிற்றுண்டியினை தாயார் செய்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.