புதுடெல்லி: மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம் கடந்த மாதம் 10-ம் தேதி நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் இன்று காலை தொடங்கியது. மக்களவை நடவடிக்கைகள் தொடங்கியதும் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ராகுல் காந்தி லண்டனில் நமது நாட்டை அவமானப்படுத்திவிட்டார். அவரது பேச்சிற்கு ஒட்டுமொத்த அவையும் கண்டனம் தெரிவிக்கிறது” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மத்தியில் திரண்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
பின்னர் 2 மணிக்கு அவை நடவடிக்கைகள் தொடங்கியது. மக்களவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சிற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சத்தமாக கோஷங்கள் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து அவையை வழிநடத்திய ராஜேந்திர அகர்வால் மக்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். அதேபோல மாநிலங்களையிலும் ராகுல் விவகாரம் தொடர்பாக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பியதால் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.
மாநிலங்களவையில் 26 மசோதாக்களும், மக்களவையில் 9 மசோதாக்களும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. முன்னதாக, நாடாளுன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் பெரும்பாலான அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டத்தில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மக்களவையில் 84 சதவீதமும், மாநிலங்களவையில் 56 சதவீதமும் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.