2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த கட்சியின் தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் இருநாட்கள் பயணமாக அவர் நேற்று (செப்டம்பர் 22ஆம் தேதி) தமிழகம் வந்தடைந்தார். நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் தேசிய தலைவர் நட்டா, வரும் காலத்தில் தமிழ்நாட்டில் தாமரை ஆட்சி மலரும் என்று பேசியிருந்தார். இதையடுத்து இன்று 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, இன்று காலை பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலுக்கு சென்ற ஜெ.பி.நட்டா அங்கு சாமி தரிசனம் செய்தார்.