ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள குவோம் மாகாணத்தில் உள்ள வங்கி ஒன்றின் மேலாளர் ,ஹிஜாப் அணியாமல் வந்த பெண்ணுக்கு வங்கிச் சேவை வழங்கி இருக்கிறார். இதனால் வங்கி மேலாளரை பணி நீக்கம் செய்ய அம்மாகாணத்தின் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஈரானை பொறுத்தவரை அங்கு பெரும்பாலான வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளன. இதனால் அங்கு ஹிஜாப் விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியமாகிறது என்று ஈரான் அரசு விளக்கமளித்துள்ளது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை சிறப்புப் படை போலீஸார், வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார். இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஷாவின் மரணம் தற்போது ஈரானை பெரும் போரட்ட கலமாக மாற்றியுள்ளது.