மதுரை: நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: பய உணர்வை ஏற்படுத்துவதற்காக சட்டரீதியான எச்சரிக்கைகள் விடப்படுகின்றன. குறிப்பாக 21 வயதுக்கு உள்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பது வருந்தத்தக்கது. எனவே மது விற்பதையும், வாங்குவதையும் கட்டுப்படுத்தி, மது-போதை பழக்கத்தை குறைக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும். தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மொத்த மற்றும் சில்லறை விற்பனையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மது விற்பனை மூலம் மாநில அரசு அதிக வருவாயை ஈட்டி வருகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனை கடைகள் பெருகி வருகின்றன. இதனால் தனிநபர்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சீரழிக்கிறது. பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், பெண்கள் என அனைவரும் மதுக்கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்கு, உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே மது வாங்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனவே, உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளின்படி மதுபாட்டில்களின் லேபில்களில் உரிய விவரங்கள் அச்சிடப்பட வேண்டும். அதேபோல “மது அருந்துவது தீங்கு விளைவிக்கும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்” என்ற வாசகத்தை கொட்டை எழுத்தில் பெரிதாக அதில் பிரசுரிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களும், 21 வயதுக்குட்பட்ட நபர்கள் கூட மது அருந்துவதால், மாநிலத்தின் சமூக -பொருளாதார சூழல் கணிசமாக பாதிக்கிறது. மது ஒழிப்பை சமூக- பொருளாதார, பொது சுகாதார பிரச்சினையாக கருத வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்த வேண்டும். அரசாங்கத்தின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்பதை இந்த கோர்ட்டு மறந்து விடவில்லை. இருந்தபோதும் பொதுநலனை கருத்தில் கொண்டு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கிறோம். அதன் விவரம் வருமாறு: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை விற்கவும், வாங்குவதற்கும் உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி.க்கு மத்திய அரசு அறிவுறுத்தல்களை வழங்குவது, மதுபாட்டில்களில் உரிய விதிமுறைகள் இடம் பெறச் செய்வது, புகார்களை தமிழில் பதிவு செய்வதற்கு மது பாட்டில் லேபிள்களை தமிழில் அச்சிடுதல், விலைப்பட்டியல் உள்ளிட்ட விவரங்களையும் அனைத்து வாடிக்கையாளர்களும் அறியும் வகையில் இடம் பெறச்செய்வது. டாஸ்மாக் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதை உறுதி செய்வது, 21 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மதுபானம் விற்கப்படுவதில்லை என்பதை மாநில அரசு உறுதி செய்வது. மேற்கண்டவற்றுடன் பொது நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.