நவராத்திரி கொண்டாட்டத்தின் நிறைவு நாளான இன்று வீடுகளிலும், தொழில் நிறுவனங்களிலும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி துங்கா பூஜை என்ற பெயரில் வட மாநிலத்தில் புகழ் பெற்ற திருவிழாவாக இருந்தாலும், தமிழகத்தில் கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜை கொண்டாப்பப்படுகிறது. இதையொட்டி, வீடு மற்றும் தொழில் செய்யும் இடங்களில் பள்ளிக் குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், சமையலுக்கு அடிப்படை தேவையான உப்பு, புளி, மிளகாயுடன் அவல், பொரி, சுண்டல் ஆகியவற்றை தேவியருக்கு படையலிட்டு வாழிபாடு நடத்தப்படுகிறது. மேலும், பண்டிகை காலம் காரணமாக கடைகளிலும் பூஜை பொருட்கள் வியாபாரம் அமோகமாக நடந்து வருகிறது.
இதையொட்டி, தமிழக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ”ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துகள். இந்நன்னாளில் கல்வி, செல்வம், துணிவை அளிக்கும் கலைமகள், திருமகள், மலைமகள் அருளால் வாழ்வில் வெற்றிகள் குவிந்து மேன்மை பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுட்டுள்ளார்.