சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகவலைதளப்பதிவில்:- “தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிற, ஒன்றிய பாஜக அரசை விமர்சிக்கிற மாணவர்கள் மீது வன்முறை வெறியாட்டம் கட்டவிழ்த்து விடப்படும் போதெல்லாம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பாதுகாப்பு பணியாளர்களும், டெல்லி காவல்துறையும் கண்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை சத்ரபதி சிவாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடியதாக கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கான பொதுவான அறை ஒன்றை நடந்த அந்த நிகழ்வுக்குப் பின்னர், இடதுசாரி அமைப்பைச் சேர்ந்த மாணவர் அமைப்பின் சார்பில் ஆவணப்படம் ஒன்று திரையிடப்பட இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஏபிவிபி அமைப்பினரின் நிகழ்ச்சி முடிந்த பின்னர், அதே அறையில் இருந்ததாகவும், ஆவணப்படம் திரையிட வந்தவர்கள் ஏற்கெனவே நிகழ்ச்சி முடிந்தவர்களை அறையில் இருந்து வெளியேற கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஏபிவிபி அமைப்பினர் அந்த அறையில் இருந்த தலைவர்களின் படங்களை அடித்து உடைத்ததாகவும், இதனைத் தட்டிக்கேட்ட தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.