புதுடெல்லி : 2023-ம் ஆண்டில், அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில் முதலில், நாகாலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. திரிபுரா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியும், நாகாலாந்து மாநிலத்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியும், மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும் ஆட்சி நடத்துகின்றன. 3 மாநிலங்களை தொடர்ந்து, கர்நாடகாவில் ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு சட்டசபை பதவிக்காலம் மே 24-ந் தேதி முடிவடைகிறது.
இந்த ஆண்டின் பிற்பாதியில் மிசோரம், சத்தீஷ்கார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இம்மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெவ்வேறு தேதிகளில் முடிவடைகிறது. 5 மாநிலங்களிலும் தேர்தல் ஒன்றாகவே நடக்க வாய்ப்புள்ளது. மத்தியபிரதேசத்தில் பா.ஜனதாவும், சத்தீஷ்கார், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும், தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதியும் ஆட்சி நடத்துகின்றன. மேற்கண்ட 9 மாநிலங்களுடன் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திலும் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பை மறுக்க முடியாது. பாதுகாப்பு நிலவரத்தை பொறுத்து, தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். அடுத்த ஆண்டு (2024) கோடை காலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது.