தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சிவகளையில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாா்ச் 30ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளின்போது, தங்கத்தால் ஆன சிறிய பொருள்கள் கிடைத்துள்ளது. முன்னதாக, முதுமக்கள் தாழிகள், வட்ட சில்லுகள், மண்ணால் ஆன பொருள்கள், மண்பானைகள், மண் சட்டிகள் செம்பு மற்றும் இரும்பு பொருள்கள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, நுண் கற்கருவிகள், சங்கு பொருட்கள், புடைப்பு சிற்பங்கள், வளையல்கள், பாசிமணிகள், தக்ளி, முத்திரைகள், எலும்புகள், எலும்பாலான கூா்முனை கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அரிய தொல்பொருள்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.