திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோக்கமூர் ஊராட்சியில் தலித் சமுதாய மக்கள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் 80 மீட்டர் நீளத்துக்கு சுமார் 250 அடி தீண்டாமை சுவர் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில அரசியல் குழு தலைவர் நீல வானத்து நிலவன் தலைமையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் அறம் பட இயக்குநருமான கோபி நாயனார் மற்றும் கட்சியினர் கிராம மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர் இதுகுறித்து கோபி நாயனார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தற்போது தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுவதாக முதலமைச்சர் கூறுகிறார் ஆனால் இன்னும் பல இடங்களில் ஜாதி மாடல் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. தலித் சமுதாயத்திற்கு எதிராக ஆதிக்க சாதியினர் இதுபோன்ற பிரச்சினைகளை ஆங்காங்கே செய்து வருகின்றனர். எனவே, இந்த சுவற்றை உடனடியாக இடித்து அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளோம். இந்த மனு மீது உரிய நடவடிக்கை இல்லை என்றால் விடுதலைச் சிறுத்தைகள் அரசிடம் கெஞ்சிக் கொண்டிருக்காது, நாங்களே அந்த சுவற்றை இடித்து அகற்றுவோம். இதனால், எங்கள் மீது வழக்குகள் தொடர்ந்தாலும் அதை எதிர்கொள்வோம்” என ஆவேசமாக தெரிவித்தார்.