சென்னை : ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. தடை மசோதா உயிர் கொல்லியான ஆன்லைன் சூதாட்டத்துக்கு கடிவாளம் போடும் வகையில், தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி, ‘ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழ்நாட்டில் தடை’ விதிக்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா கவர்னர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மசோதா குறித்து சில விளக்கங்களை கவர்னர் தரப்பில் இருந்து, தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசும், கவர்னர் கேட்ட விளக்கத்தை தெரிவித்தது. ஆனாலும் கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழக சட்டசபையில் கவர்னருக்கு எதிராக நேற்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு வலியுறுத்த வேண்டும் என்று மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியை கேட்டுக்கொள்வதாக தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. மு.க.ஸ்டாலின் துரிதமாகவும், தொடர்ச்சியாகவும் எடுத்த நடவடிக்கையால் நேற்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் மூடு விழா காணப்பட்டு, சூதாட்டத்துக்கு அடிமையாகி உயிரையும், பணத்தையும் இழக்கும் சம்பவங்கள் தடுக்கப்படும் என்பதால் அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசிதழில் சட்டமாக வெளியிடப்படும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் கவர்னர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.
தண்டனை என்னென்ன? :-ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.