சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி நேற்று கூறியதாவது: தமிழகத்தில் பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு ‘தமிழர் மரபு’, ‘தமிழரும் தொழில்நுட்பமும்’ என்ற 2 புதிய தமிழ் மொழி பாடங்கள் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இப்பாடங்களை மாணவர்களுக்கு பயிற்றுவிக்க, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)வழிமுறைகளின்படியே பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அதாவது, முதுநிலை தமிழ் படித்து நெட், ஸ்லெட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது பிஎச்டி முடித்தவர்கள் மட்டுமே உதவி பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
வெளிநாடுகள், பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தமிழகத்தில் பொறியியல் படிக்கின்றனர். அவர்களும் தமிழர் மரபை தெரிந்து கொள்ளும் வகையில், இந்த 2 பாடநூல்களும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அவர்களுக்கு கற்றுத் தரப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழ் பாடங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
மேலும் உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்பது குறித்து அவர் கூறுகையில், அமைச்சர் பதவி வழங்குவது வாரிசு அரசியல் ஆகாது திமுகவில் 10 சதவீதம் பேரின் வாரிசுகளுக்குதான் பதவி தரப்பட்டுள்ளது.மீதமுள்ள 90 சதவீதம் பேர் உரிய விதிகளின்படி தேர்வாகியுள்ளனர். வருங்காலத்தில் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப திராவிட மாடல் ஆட்சியை நடத்தும் இளைஞராக அவர் செயல்படுவார்.மேலும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டாம் என திமுகவில் யாரும் கூறமாட்டார்கள். அவரது திறமைக்கு, விரைவில் துணை முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கிறேன்” இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.