திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியிருப்பதாவது:- சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு முதல்வர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கத்தை உள்ளடக்கியதாகும். அதன்படி 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.8.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.5.2023 அன்று மாலை 4 மணி வரை கடைசி நாள் ஆகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். மேலும் விண்ணப்பம், தங்கள் சாதனை பற்றிய பத்திரிக்கை செய்திகள் மற்றும் சான்றிதழ்களை 3 புத்தகங்களாக தயார் செய்து மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.