இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், கடந்த 2014ஆம் ஆண்டு பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் பெற்ற ரூ.1 கோடியே 3 லட்சம் கடன் தொகையை திருப்பி அளிக்காததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டது. இதையொட்டி நீதிமன்றம் அளித்த உத்தரவை அடுத்து பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்தின் கடன் தொகையை காசோலையாக அளித்தார் லிங்குசாமி. ஆனால், அந்த காசோலைகள் பணமின்றி திரும்பியதால் பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் லிங்குசாமி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, காசோலை மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி) உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாகச் சந்திக்க உள்ளோம் என லிங்குசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.