அஇஅதிமுக கட்சியின் முந்தைய ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்த ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சுமார் ரூ.58 கோடிக்கு மேல் சொத்துக்கள் சேர்த்திருப்பதாக, வழக்குப்பதிவு செய்து அவருக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ் அமைச்சராக இருந்த 2015-2021 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் திருவாரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, ஆர்.காமராஜ் சொந்த ஊரான மன்னார்குடி தெற்கு வீதியில் உள்ள வீடு, அவருடைய அக்கா மகன் ஆர்.ஜி.குமார் வீடு, நன்னிலத்தில் உள்ள வீடு, உறவினரான வழக்கறிஞர் உதயகுமார் வீடு, மன்னை கிருஷ்ணமூர்த்தி வீடு, தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் உள்ள ஆர்.காமராஜ் சம்மந்தி டாக்டர் மோகன் வீடு ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சென்னையில் அடையார், மயிலாப்பூர், போயஸ் கார்டன் உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தொிவித்து ஆர்.காமராஜ் வீட்டின் முன்பு அதிமுக கட்சியினர் கூடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகிறார்கள். இவர் அஇஅதிமுக கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளராக தற்போது இருந்து வருகிறார். ஏற்கனவே முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திய நிலையில், இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.