புதுடெல்லி : இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அந்நிய செலாவணி இருப்பு குறைந்து, உணவு தானியங்கள், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு, நாள்தோறும் பல மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்களின் கொந்தளிப்பால் ஏற்பட்ட போராட்டத்தால் அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினர். அதனை தொடர்ந்து இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக்கொண்டார்.
மேலும், பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியது. தற்போது இலங்கை படிப்படியாக மீண்டெழுந்து வருகிறது. இந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலும் ரூ.24,000 கோடி கடன் தருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) அறிவித்துள்ளது.