சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் 2023 விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது: அயலக மண்ணில் வசிக்கும் நம் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்குத் தேவை ஏற்படக்கூடிய நிலைகளில் உதவி புரிந்து வரும் தமிழ்ச் சங்கங்களின் பணிகளை அங்கீகரிக்கவும், அடுத்த தலைமுறைக்கு தமிழ்ப் பண்பாடு, தமிழ்மொழி கற்றல், கற்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் “அயலகத் தமிழர் நாள்” கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதலாவதாக, தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு காலக்கட்டங்களில், புலம்பெயர்ந்து அயல்நாடுகளில் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் வாழ்ந்து வரும் தமிழர்கள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு தரவுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்படும். 2-வதாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். 3-வதாக அயல்நாடுகளில், வெளிமாநிலங்களில் பணிக்குச் சென்று அங்கு எதிர்பாராதவிதமாக இறந்துவிடும் தமிழர்களின் குடும்பத்திற்கு மாத ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான்காவதாக, அயல்நாடுகளுக்கு செல்வோர் குறித்த தரவுத் தளம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிடுவதோடு, வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் தமிழ்ச் சொந்தங்களின் நலன் காத்திட பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, கண்ணை இமை காப்பதைப்போல, உலகெங்கும் வாழும் நம் தமிழ் இனத்தை இந்த அரசு தொடர்ந்து காத்திடும் என்று மீண்டும் உறுதியளிக்கிறேன்.
தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் என்ற பொறுப்பில் இருக்கக்கூடிய நான், உங்களில் ஒருவனாகவும், இந்த அரசு உங்களுக்கு உறுதுணையாகவும் இருக்கும். உங்களால் ஆன ஒத்துழைப்பினை நீங்கள் வழங்குங்கள், இணைந்து நாம் பயணிப்போம்.உலகெங்கும் வாழும் தமிழர் வாழ்வு செழிக்கும், தமிழ்நாடு தழைக்கும் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.