விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் ஜூபின் பேபி என்பவர் அன்பு ஜோதி ஆசிரமத்தை நடத்தி வந்தார். இந்த ஆசிரமத்தில் இருந்து திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 10ந்தேதி கெடார் போலீசார், மாற்றுத்திறனாளி நலத்துறை, சமூக நலத்துறை, வருவாய் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆசிரமத்தில் இருந்த பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, ஆசிரமத்தில் இருந்த ஜபருல்லா உள்பட 11-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது என தகவல்கள் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தாக்கல் செய்த ஆவணங்களை விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அன்பு ஜோதி ஆசிரமத்தின் நிர்வாகி ஜூபின் பேபி ஆசிரமத்தின் பேரில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தை ஆரம்பித்து தான் ஆசிரமத்தில் செய்யும் சேவைகளை படங்களுடன் வெளியிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஜூபின் பேபி கைது செய்யப்பட்டு ஆசிரமமும் மூடப்பட்ட நிலையில் ஆசிரமத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை சிபி.சி.ஐ.டி போலீசார் முடக்கினார்கள்.