அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக படக்குழு பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, நேற்று திருச்சியில் உள்ள தனியார் கல்லூரிக்கு நடிகர் விக்ரம், கே.ஜி.எஃப் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருனாளினி ரவி உள்ளிட்டோர் திருச்சிக்கு விமானம் மூலமாகச் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பார்க்க விமான நிலையத்தில் அதிக அளவில் கூடியிருந்த ரசிகர்களை விரட்ட விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தடியடி நடத்தியுள்ளனர். சிலர், காலால் கூடி இருந்தவர்களை எட்டி உதைக்கும் காட்சிகளும் வெளியாகி வைரலானது. இதையடுத்து, நடிகர் விக்ரம் இதுத்தொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “கோப்ரா திரைப்பட முன்னோட்ட நிகழ்விற்கு திருச்சி வந்த என்னை, வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள். அதே வேளையில் சில விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்துள்ளது, அத்தகைய நிகழ்விற்கும், அசௌகர்யத்திற்க்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறேன். “இங்கு இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.