ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க நாடாளுமன்ற கீழவைத் தலைவா் நான்சி பெலோசி கடந்த புதன் கிழமை மாலை தைவான் தீவின் தலைநகர் தைபேவுக்கு சென்றுள்ளார். நான்சி பெலோசி, தைவானுக்குச் செல்வாா் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே அமெரிக்காவின் இந்த செயலுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. நான்சி பெலோசி, புதன்கிழமை தைபேயில், நீா்ச்சந்தி பகுதி மற்றும் பிற இடங்களில் ஜனநாயகத்திற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு இரும்புக் கவசமாக உள்ளதாக கூறினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் சீனா, இந்த விவகாரத்தில் ஏற்கனவே எச்சரித்திருந்தது போல் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி, அவரது வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து தைவான் வான்பகுதியில் 20க்கும் மேற்பட்ட போா் விமானங்களை சீனா பறக்கவிட்டதாக தைவான் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தைவான் எல்லையையொட்டிய பகுதிகளில் சீனா தனது ராணுவத் தளவாடங்களைக் குவித்து ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. இதனால்,அப்பகுதிகளில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், சீன ராணுவம் வியாழக்கிழமை மதியம் தைவான் தீவைச் சுற்றிலும் ராக்கெட் குண்டுகள் வீசி போா்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. தைவான் விவகாரங்களை கவனித்துக் கொள்ளும் சீன ராணுவத்தின் கிழக்கு மண்டல படைப் பிரிவு வீரா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா். ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை இந்த போர் ஒத்திகை நடத்தப்படவுள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் அங்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. தைவான் வளர்ச்சிக்கு நாங்கள் எல்லா ஒத்துழைப்பையும் தருவோம் என்று நான்சி தெரிவித்தார். தைவான் தீவைச் சுற்றிலும் குண்டுகள் வீசி போா் பயிற்சி மேற்கொண்ட சீனாவின் ஆத்திரமூட்டும் ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, தைவானின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான நீண்டகால குறிக்கோளுக்கு முரணான நடவடிக்கை என்று கூறியுள்ளது.