தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்று மாசு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் காற்று மாசைக் குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும், காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது ‘கடுமை’ (severe) பிரிவில் 431 புள்ளிகளாக உள்ளது. ஹரியானா, பஞ்சாப் போன்ற அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுக்கு முக்கியக் காரணம் என டெல்லி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாதுகாப்பு கருதி 1 முதல் 5 வரையிலான குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், வாகனங்கள் இயக்கத்தைக் குறைப்பதற்காக மக்களை வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தில்லியில் மாசைக் கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. அதுபோல காற்று மாசு நொய்டாவில் 529, குருகிராமில் 478 புள்ளிகளாக இன்று காலை பதிவாகியுள்ளது.