சென்னை, ராயப்பேட்டை பகுதி அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அஇஅதிமுகவின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகை கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி கலவரம் நடந்தது, அலுவலகம் சூரையாடப்பட்டதுடன் ஆவணங்களும் மாயமாகின. இதுத்தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்குகளை சிபிஐ அல்லது பிற விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று சி.வி.சண்முகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுத்தொடர்பான விசாரணை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக அலுவலக கலவர வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், கலவரம் தொடர்பாக, ஓபிஎஸ், வைத்தியலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.