சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர். பொதுக்குழுவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முன்னதாக முன்மொழியப்பட்ட 23 தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதனையடுத்து, அடுத்த அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்மகன் உசேன் அறிவித்தார். இதற்கிடையில், இந்த பொதுக்குழு சட்ட விரோதமானது என்று வைத்திலிங்கம் கூறிக்கொண்டே வெளியேற அவரைத்தொடர்ந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விழா மேடையில் இருந்து இறங்கி பொதுக்குழுவில் இருந்து பாதியில் வெளியேறினர். பின்னர், விழாவில் ஒற்றை தலைமை குறித்தும், ஈபிஎஸ்-ஏ அடுத்த தலைமை என்றும் எடப்பாடி ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பியதுடன் அவரை மாலை அணிவித்து உற்சாகப்படுத்தினர். மேலும், ஈபிஎஸ்-க்கு வெள்ளி செங்கோலை பொதுக்குழு உறுப்பினர்கள் பரிசாக அளித்தனர்.