சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். இதன்மூலம், ஒற்றை தலைமை, யாருக்கு பலம் அதிகம், பொதுக்குழுக்கு தடைக்கோரி நீதிமன்றத்தில் மனு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில நாட்களாக அதிமுக பொதுக்குழு நடைபெறுமா என்ற எண்ணத்தில் இருந்த கட்சி தொண்டர்களின் கேள்விக்கு பதிலாக இன்றைய பொதுக்குழுக் கூட்டம் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு நடைபெறுகிறது. மேலும், பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதியில் தமிழகம் முழுவதிலிருந்தும் அதிமுக தொண்டர் வந்துள்ளதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டுள்ளது. இத்துடன், உறுப்பினர் அட்டை இருப்பவர்கள் மட்டுமே அரங்குக்குள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பதால் அரங்கத்துக்கு வெளியே தொண்டர்கள் பல ஆயிரம் பேர் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிந்துக்கொள்ள மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.