சென்னையில் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள அஇஅதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கட்சி விதிமுறைகளின்படி பொதுக்குழுவை கூட்டுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து விளக்கமளிக்க அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளாக வழக்கை விசாரித்த நீதிபதிகள் 3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இருதரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை பொதுக்குழு நடக்க திட்டமிட்ட ஜூலை 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தள்ளி வைத்தார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிட்ட 15 நிமிடங்களுக்கு முன்பு பொதுக்குழுவுக்கு தடைகோரிய வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதால் கட்சியினர் பெரும் பரபரப்பில் உள்ளனர்.