அஇஅதிமுகவில் நடைபெற்ற ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக அஇஅதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அனுமதிக்கக் கூடாது என ஓ.பன்னீா்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவை கடந்த ஜூலை 11ஆம் தேதி விசாரித்த நீதிபதி சத்தி’கட்சி விதிகளுக்கு உள்பட்டு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தலாம். பொதுக்குழுவில் செயல்முறையில் விதிகள் மீறப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். இதையடுத்து, தனி நீதிபதி அமா்வு உத்தரவை எதிா்த்து, ஓ.பன்னீா்செல்வம் சார்பில் கடந்த ஜூலை 15ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளா் கையொப்பம் இல்லாமல் உரிய அழைப்புக் கடிதம் இல்லாமல் இந்தப் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை (ஜூலை 29ஆம் தேதி) விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்ட பின்னரே ஓ.பன்னீர்செல்வம் அளித்த மனுவில் எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.