சென்னையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தொடா்ந்த வழக்கை உயா் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று (ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி) விசாரிப்பதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம், வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு (ஆகஸ்ட் 5ஆம் தேதி) தள்ளி வைக்க வைரமுத்து கோரிக்கை வைத்தார். இதையேற்ற நீதிபதி வழக்கை தள்ளி வைத்தாா். அதேநேரம் வழக்கை திங்கட்கிழமைக்கு (ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி) தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில், இந்த வழக்கின் நீதிபதியை மாற்றுவது குறித்து தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அதுதொடா்பாக இன்னும் முடிவெடுக்காத நிலையில் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிக்க கூடாது என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஓ.பன்னீா்செல்வத்தின் நடவடிக்கை நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும், களங்கப்படுத்தும் வகையில் உள்ளது என்றும் தீா்ப்பில் தவறு இருந்தால் மேல்முறையீடு செய்யலாம் அல்லது திருத்தம் இருந்தால் தன்னிடமே முறையீடு செய்யலாம் என்றாா். இந்த நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கோரியதுடன் வழக்கில் அவரே நீதிபதியாக நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளது. இதையத்து, வழக்கு விசாரணைக்கு புதிய நீதிபதியை நியமிப்பது குறித்த முடிவை தலைமை நீதிபதியிடமே விடுவதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரித்து பதிவுத்துறை மூலம் வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தலைமை நீதிபதி நியமித்து இரு வாரங்களில் வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில், இன்று (ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி) காலை வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் வந்தது. அப்போது, ஓ.பி.எஸ். தரப்பில், டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் வழக்கை நாளை மறுதினம் தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு விசாரணையை நாளை மறுதினம் (ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி) பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.