அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், 75 கழக தலைமை நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்துக்கு தலைமை கழக செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமியின் பெயர் இடம்பெற்ற அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று காலை நடைப்பெற்ற கூட்டத்தில் ஒரு சில நிர்வாகிகளை தவிர மற்ற நிர்வாகிகள் பங்கேற்று 11ஆம் தேதி நடைப்பெற இருக்கும் பொதுக்குழு கூட்டம் குறித்து ஆலோசனை செய்துள்ளனர். பல முக்கிய முடிவுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டாலும், பொதுவெளியில் எதுவும் பகிரப்படவில்லை. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. நேற்று தன் சொந்த மாவட்டமான தேனிக்கு சென்ற அவர், இன்று சென்னையில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்த அதே நேரத்தில் தேனியில் சென்னைக்கு புறப்பட்டதாக தெரிகிறது. அதேவேளையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் இல்லாமல் அதிமுக அலுவலகத்தில் இன்று நடக்கவுள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டம் செல்லத்தக்கதல்ல என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை பசுமைவழிச் சாலையில் கழகத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அவரது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், நேற்றைய நமது அம்மா செய்தித்தாளில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல, கழக நிர்வாகிகள் கூட்டம் நடத்த விடுக்கப்பட்டு இருந்த அழைப்பிதழிலும் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இடம்பெறாமல், தலைமை கழக செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி என்ற பெயரிலே வெளியானது. ஏற்கனவே கடந்த சில தினங்களாக அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரம் கொழுந்துவிட்டு எரிந்து வரும் நிலையில், இன்று நடைபெற்ற தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் அழைப்பு கடிதம் முதல் பன்னீர்செல்வத்தின் கடிதம் வரை அனைத்தும் சர்ச்சையாகவே உள்ளது. ஆனால், கூட்டம் முடிவில் முக்கிய முடிவுகள் வெளிப்படையாக கூறப்படும் என்று எதிர்ப்பார்த்த அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.