அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில், சி.விஜயபாஸ்கர், வேல்ஸ் குழுமம் மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான மற்றும் வேல்ஸ் குழுமத்துக்கு சொந்தமான சென்னை, சேலம், மதுரை, தேனி, புதுக்கோட்டை, திருவள்ளுர் மற்றும் தாம்பரம் ஆகிய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் மேற்கொண்ட பணிகளுக்கான ஒப்பந்தங்களில் முறைகேடு செய்து அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்படுத்தியாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை, கோவை, திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி என மொத்தம் 26 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.