அஇஅதிமுக 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில், அதிமுக தொடங்கப்பட்டு பொன்விழா ஆண்டு நிறைவடைந்து, 51ஆவது ஆண்டு இன்று அடியெடுத்து வைக்கிறது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர்.மாளிகையில் அதிமுக தொடங்கப்பட்ட 51ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுக அலுவலகத்தில் கட்சியின் கொடியை ஏற்றி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் உட்கட்சி பிரச்னை காரணமாக 3 அணிகளாக பிரிந்து இந்த ஆண்டு விழாவை அதிமுகவினர் கொண்டாடுகின்றனர். அதன்படி, பழனிசாமி தரப்பில் கட்சி தலைமை அலுவலகத்திலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தியாகராயநகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்திலும், சசிகலா தரப்பில் எம்.ஜி.ஆர்-ன் ராமாவரம் இல்லத்திலும் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கத்து.