அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தன் 2-வது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா பார்டர் – கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் வென்றதோடு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கின்றது.
மாறாக, இந்தூர் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கேப்டன்சி மாற ஸ்டீவ் ஸ்மித் கொஞ்சம் ஆக்ரோஷமான களவியூகம் அமைத்து இந்தியாவை தோற்கடிக்கச் செய்தார், நேதன் லயனை அந்த டெஸ்ட்டில் இந்திய வீரர்களால் ஆட முடியவில்லை. அகமதாபாத் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிட்ச் பற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்ப, இந்த டெஸ்ட்டிற்கு முழுக்க முழுக்க ஒரு பிளாட் பிட்சைப் போட்டனர். அதனால், ஆஸ்திரேலியா 480 ரன்களை எடுக்க, இந்திய அணியில் ஷுப்மன் கில், விராட் கோலி சதங்களுடனும் அக்சர் படேலின் அற்புதமான அரைசதத்தினாலும் இந்தியா 571 ரன்களைக் குவித்தது.
நியூஸிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சனின் அற்புத சதத்தினால் நியூஸிலாந்து வெற்றி பெற இலங்கை ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ள நிலையில் , இந்தியா தகுதி பெற்றது. ஜூன் மாதம் லண்டன் ஓவலில் இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி நடைபெறுகின்றது.