சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:- கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் தக்காளி விலை பெரும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சந்தைகளில் கடந்த சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, இப்போது மொத்த விலை சந்தைகளில் கிலோ ரூ.5-க்கும், சில்லறை விலைக்கடைகளில் ரூ.10-க்கும் மட்டுமே விற்கப்படுகிறது.
மேலும், பறிக்கப்பட்ட தக்காளிகளை சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக செலவாகும் என்பதால் சாலைகளிலும், குப்பைகளிலும் கொட்டுகின்றனர். சந்தைகளில் கத்தரிக்காயின் விலையும் கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரை என்ற நிலையிலிருந்து கிலோ ரூ.10 என்ற அளவுக்கு சரிந்து விட்டது. அதனால், கத்தரிக்காயின் கொள்முதல் விலையும் ஒற்றை இலக்கத்திற்கு சரிந்து விட்டது. அனைத்து காய்கறிக்கும் கொள்முதல் விலை நிர்ணயிப்பதன் மூலம் தான் காய்கறியை பயிரிடும் விவசாயிகளுக்கு லாபம் கிடைப்பதை உறுதி செய்ய முடியும். அதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.