விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ள ஜவுளிப் பூங்காவிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதன்கிழமை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது: “உலகளாவிய வர்த்தகம் மற்றும் பொருளாதார சூழல் கடினமான ஒரு நிலையை எட்டியிருந்தபோதிலும், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மந்தமான சூழல் நிலவியபோதிலும், இந்தியா நம்பிக்கைக்குரிய ஒரு நாடாக திகழ்கிறது. வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதாரமாக இந்தியா நிலைப்பெற்றிருக்கிறது. சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வுக்காணக்கூடிய ஒரு மையமாக இந்தியா திகழ்கிறது. விருதுநகரில் ஜவுளிப்பூங்காவை அமைப்பதற்கு தேவையான அனைத்து சூழலியல் ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தமைக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகம் ஏற்கெனவே ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற அடிப்படையில், இந்த பிரதமர் மித்ரா ஜவுளிப்பூங்கா விருதுநகரில் அமைக்கப்படுகிறது. இதுவரை தமிழகத்தில் ஜவுளித்துறையில் மதிப்புக் கூட்டுப்பொருட்கள் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த பூங்கா அமைவதன் மூலம் ஒரே இடத்தில் அனைத்து வசதிகளும் அமையவிருக்கிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஆயிரம் ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த பூங்கா மூலமாக தமிழ்நாட்டின் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இன்றைய நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன” என்று அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜவுளித்துறை மற்றும் ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், மா சுப்பிரமணியன், ஆர்.காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.