அக்னிபாத் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் குறுகிய காலத்தில், அதாவது நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்றுவதற்கான வேலைவாய்ப்பை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 15ஆம் தேதி தெரிவித்தார். இதனையடுத்து திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய அரசின் இந்த அக்னிபாத் திட்டத்துக்கு பீகார், உத்தர பிரேதசம், தெலுங்கானா, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டங்கள் வன்முறையாக மாறி தூப்பாக்கிச்சூடுகளும் நடைப்பெற்றது. மனித உயிரிழப்புகளுடன் பல நூறுகோடி மதிப்பிலான பொது சொத்துகளும் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நிரந்தரமற்ற வேலையாகவும், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வேலையில்லாமல் அக்னிபாத்தில் பணியாற்றியவர்கள் தவிக்கவிடப்படுவார்கள் என்ற கோரிக்கையே மேலோங்கி இருந்த சூழலில், அக்னிபாத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு தங்களின் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் முன்வரத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் ஆட்சேர்ப்புக்கான பதிவு ஜூன் 24ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறும் என்று விமானப்படை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், ஜூலை 24ஆம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்று விமானப்படை அறிவிப்பில் தெரிவித்துள்ளது.