சென்னை ராயப்பேட்டையில் உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக அலுவலகத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து நேற்று ஆலோசனை நடத்தினர். இந்த மாதம் (ஜூன் 23ஆம் தேதி) அஇஅதிமுக கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ள நிலையில், இதுதொடர்பாக நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது, கட்சி அலுவலகத்துக்கு வெளியே கட்சி தொண்டர்கள் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டு கோஷங்களை எழுப்பி சர்ச்சையை கிளப்பினர். இதனைத்தொடந்து காலை 10 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணியளவில் முடிவுற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து நேற்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசியதாக தெரிகிறது. அதேவேளையில், இன்று ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசி வருகின்றனர். இத்துடன், தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், தேனி போன்ற பகுதிகளில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஒற்றை தலைமை குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால், அதிமுகவில் தற்போது கிளம்பி உள்ள ஒற்றை தலைமை பூதம், அந்த கட்சிக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.