மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் திரைப்படம் எமர்ஜென்சி. இந்த திரைப்படத்தில் பிரபல இந்திய நடிகையான கங்கனா ரனாவத் இந்திரா காந்தியின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்ததுடன் தானே இந்த திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இந்த நிலையில் இந்த எமர்ஜென்சி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. வரலாறு சார்ந்த சுயசரிதை மாதிரியான திரைப்படங்களுக்கு ஒப்பனை மிகவும் முக்கியம் என்பதால் இந்த திரைப்பத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற ஒப்பனைக் கலைஞர் டேவிட் மலினோஸ்கியை கங்கனா ஒப்பந்தம் செய்துள்ளார். அவரின் சிறந்த ஒப்பனையால் கங்கனா ரனாவத்தின் முகம் இந்திரா காந்தியின் முகத்துடன் அச்சுஅசலாக பொருந்தியுள்ளதாக அவரது ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர். முன்னதாக தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் தாம்தூம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் கடந்த ஆண்டு தலைவி என்ற திரைப்படத்தில் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் அரசியல் சார்ந்த பெண் தலைவர் படத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், மணிகர்னிகா என்ற வரலாற்று திரைப்படத்தில் ராணி லட்சுமி பாயின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தமைக்காக இவருக்கு 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைத்தது.