நாட்டின் 75ஆவது சுதந்திர நாள் விழா வரும் 15ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரது வீடுகளிலும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்க விடும்படி பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார். இத்துடன், சமூக ஊடகங்களில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை அனைவரும் தேசியக் கொடியை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி, தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடியை பறக்கவிட்டிருந்தார். இதையடுத்து, தேசப்பற்றாளர்கள், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட சமூக ஊடக பயனாளர்கள் பலரும் தங்களது முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடிகளை பறக்கவிட்டிருந்தனர். அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் முகப்புப் பக்கத்தில் இருந்த புகைப்படத்தை மாற்றிவிட்டு தேசியக் கொடியை முகப்புப் பக்கத்தில் வைத்து பறக்கவிட்டுள்ளார்.