சென்னை : கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பக்கிரிசாமியிடம் விருத்தாசலம் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் அளித்த புகாரில் விருத்தாசலம் 30-வது வார்டு கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். பக்கிரிசாமியை திமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது:- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பக்கிரிசாமி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். திமுக நகர் மன்ற உறுப்பினர் என தெரியவந்ததும் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபடுவோரோ மனித குலத்திற்கு ஒரு அவமான சின்னம் என கருதுகிறோம். குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.