சென்னை: தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள சிவில் நீதிபதி பணியிடங்கள் 2014-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2022-ம் ஆண்டுக்கான உத்தேச திட்டமிடல் கால அட்டவணையில், ‘245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை சிவில் நீதிபதிகளுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடவில்லை. இதன்படி 2020-ம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக தேர்வு சிவில் நீதிபதி தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதி மற்றும் நிருவாகத் துறை கொள்கைக் விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், “2023-ம் ஆண்டில் மாவட்ட நீதிபதி பதவியில் உள்ள 45 இடங்களும், சிவில் நீதிபதி பதவியில் உள்ள 245 இடங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு பிரிவு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.